search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சின்னதம்பி யானை"

    மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை டாப்சிலிப் கூண்டில் அடைக்கப்பட்டது. சின்னத்தம்பி யானை அடைக்கப்பட்டுள்ள கூண்டு பகுதியில் 5 யானைகள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. #ChinnathambiElephant
    பொள்ளாச்சி:

    கோவை தடாகம் பகுதியில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிபட்ட யானை டாப் சிலிப் வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

    ஒரு சில நாட்கள் மட்டுமே வரகளியாறு பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த 31-ந்தேதி வனப்பகுதியில் இருந்து கிழக்கு திசையை நோக்கி இடம் பெயரத்தொடங்கியது.

    வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை இடம்பெயர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி உடுமலை மைவாடி கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தஞ்சமடைந்தது. யானையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    அங்கு கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டது. சின்னதம்பி யானையை கண்டு கும்கி மாரியப்பன் மிரண்டு ஓடியதால் அது விடுவிக்கப்பட்டு சுயம்பு என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. வனத்துறையின் கண்காணிப்பில் இருந்த யானையை பிடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து நேற்று காலை 7.15 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்டு வரகளியாறு பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி லாரியில் ஏற்றப்பட்ட யானை இரவு 7 மணியளவில் சேத்துமடை சோதனை சாவடியை அடைந்தது.

    சேத்துமடை சோதனைச் சாவடி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் யானைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பத்திரமாக டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது.

    நள்ளிரவு 12 மணியளவில் வரகளியாறு பகுதிக்கு யானை கொண்டு செல்லப்பட்டது. பிறகு லாரியில் இருந்து இறக்க வனத்துறையினர் முயற்சி செய்து 1.10 மணியளவில் இறக்கப்பட்டது. லாரியில் இருந்து இறக்கப்பட்ட சின்னதம்பி யானை கும்கி, கலீம் மற்றும் 2 பெண் யானைகள் உதவியுடன் கூண்டுக்குள் அடைக்க 30 நிமிடம் போராட்டம் நடந்தது. பின்னர் அதிகாலை 1.40 மணிக்கு சின்னதம்பி யானை கூண்டுக்குள் அடைக்கப்பட்டது.

    கூண்டுக்குள் அடைக்கப்பட்ட யானை ஆரவாரம் இன்றி அமைதியாக இருந்தது. கால்நடை டாக்டர்கள் அசோகன், கலைவாணன் ஆகியோர் யானைக்கு வலி நிவாரணி மற்றும் ஊட்டசத்து ஊசிகளை செலுத்தினர். கால்கள், கழுத்தில் கட்டப்பட்ட கயிறுகளை யானை பாகன்கள் அவிழ்த்துவிட்டனர்.

    பணியின்போது ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் கணேசன், மாவட்ட வன அலுவலர்கள் மாரிமுத்து, கோவை வன அலுவலர், ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலரும், மனித- யானை மோதல்களை தடுக்கும் ஆலோசகருமான தங்கராஜ் பன்னீர்செல்வம், வனச்சரக அலுவலர் நவீன்குமார் உட்பட பலர் இருந்தனர்.

    சின்னத்தம்பி யானை அடைக்கப்பட்டுள்ள கூண்டு பகுதியில் 5 யானைகள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் கணேசன் கூறும்போது, ஓரிரு மாதங்களில் சின்னத்தம்பி யானை பாகன்களின் கட்டளைகளை புரிந்துகொள்ளும். அதற்கு பிறகு முகாம் யானைகளுடன் சேர்த்துக் கொள்ளப்படும் என்றார்.  #ChinnathambiElephant
    உடுமலையில் 14-வது நாளாக முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் ஆரம்ப கட்ட பணிகள் இன்று காலை தொடங்கியது. #ChinnathambiElephant
    உடுமலை:

    கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    அங்கு வசிக்க விரும்பாத சின்னதம்பி 130 கி.மீட்டர் இடம் பெயர்ந்து செழிப்பு மிகுந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை மைவாடி மற்றும் கண்ணாடிப்புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த 14 நாட்களாக முகாமிட்டுள்ளது. அங்கு கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம், வெங்காய பயிர்கள் உள்ளிட்டவை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

    நாட்டு உணவு அதிகளவில் கிடைப்பதால் யானை அந்த பகுதியை விட்டு வெளியேறாமல் தங்கியது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சின்னதம்பியை காப்பு காடுகளில் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து கலீம், சுயம்பு ஆகிய 2 கும்கிகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் உரிய பலன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் சின்னதம்பி கும்கியாக மாற்றப்படும் என்று பேசப்பட்டது. இதனையடுத்து சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க வேண்டும். வனப்பகுதியில் உள்ள சட்டவிரோத செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சின்னதம்பியை கும்கியாக மாற்றத்தடை கேட்டு மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்குகளை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் ஆஜராகி யானையை முகாமில் அடைப்பதே சரியான முடிவு என்று விளக்கம் அளித்தார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் கூறும்போது, சின்னதம்பி யானையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டது குறித்தும், முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிப்பதே சிறந்தது என்று வாதிட்டார்.

    இந்நிலையில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் யானை விவகாரத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமல் பாதுகாப்பாக செயல்பட வேண்டும். வாகனத்தில் ஏற்றும்போது துன்புறுத்தக்கூடாது.

    முக்கியமாக உயிர்சேதம் ஏற்படாமல் கவனமாக செயல்பட வேண்டும். யானை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதியில் கொண்டு விடுவதா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்ப்பு அளித்தனர்.

    தீர்ப்பையடுத்து இன்று காலை சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. இன்று காலை சின்னதம்பி யானை சர்கார் கண்ணாடிபுதூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் சுற்றியது.

    எனவே அங்கிருந்து வெளியேற்றி கிணறு, குளம், குட்டை இல்லாத சமவெளிப்பகுதிக்கு கும்கிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பலா உள்ளிட்ட பழங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ருசிக்க சின்னதம்பி யானை வரும்போது மயக்க ஊசி செலுத்தப்படும்.

    மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர் லாரி நிறுத்தப்பட்டு அதன் அருகே சாய்வு தளம் அமைக்கப்படுகிறது. சாய்வு தளம் வழியாக கும்கிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் சின்னதம்பி யானையை லாரியில் ஏற்றி டாப்சிலிப் யானை முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    முதற்கட்ட பணியில் 4 வனச்சரக அதிகாரிகள், 40 வன ஊழியர்கள், யானைக்கு மயக்க ஊசி செலுத்த கால்நடை மயக்கவியல் நிபுணர் அசோகன் தயார் நிலையில் உள்ளனர். இன்று மாலைக்குள் யானையை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் காட்சியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். அவர்களை வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். இருந்தாலும் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.  #ChinnathambiElephant




    ஊருக்குள் சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை துன்புறுத்தாமல் பிடித்து முகாமில் அடைக்கும்படி, தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Chinnathambielephant
    சென்னை:

    கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைந்துள்ள சின்னதம்பி யானையை, பிடித்து முகாமில் அடைக்க வேண்டும். வனப்பகுதிக்கு அருகேயுள்ள சட்டவிரோத செங்கல்சூளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு வழக்கு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கேட்டு மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதே சரியான முடிவாகும் என்று வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அஜய் தேசாய் ஆஜராகி, யானையை பிடித்து முகாமில் அடைப்பதே சரியான முடிவாகும் என்று விளக்கம் அளித்தார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘சின்னதம்பி யானையினால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்களை யானை அழிக்கிறது. சின்னதம்பி யானையின் பாதுகாப்புடன், விவசாயிகள், பொதுமக்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்யவேண்டியதுள்ளது. விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு பழகிவிட்டதால், இனி வனப்பகுதிக்குள் யானை செல்லாது. வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முகாமில், சின்னதம்பி யானை நன்றாக பராமரிக்கப்படும். ஓரிரு மாதங்களில் பயிற்சி அளித்து, மற்ற யானைகளுடன் நெருங்கி பழக வைக்கப்படும்’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘யானை விவகாரத்தில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடந்து விடக்கூடாது. இந்த யானையை பிடித்து முகாமில் அடைப்பதுதான் நல்லது என்று வனத்துறையும், நிபுணர் அறிக்கையும் கூறுகிறது. அதனால், சின்னதம்பி யானையை பிடிக்க தகுந்த உத்தரவை தலைமை வனப்பாதுகாவலர் பிறப்பிக்க வேண்டும். அந்த யானையை பத்திரமாக முகாமில் அடைக்க வேண்டும். அதை பிடிக்கும்போதோ, வாகனத்தில் ஏற்றி முகாமுக்கு அழைத்து செல்லும்போதோ, உடல் ரீதியாக துன்புறுத்தக்கூடாது.

    இந்த நடவடிக்கையின்போது உயிர் சேதம் எதுவும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த யானையை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதிக்குள் மீண்டும் கொண்டு செல்வதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என்றும் நீதிபதிகள் கூறினர். #Chinnathambielephant

    கடந்த 13 நாட்களாக ஒரே பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் நேற்று மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. அடிக்கடி கரும்பு தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது. #ChinnathambiElephant
    உடுமலை:

    கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    ஒரு சில நாட்கள் அங்கு வசித்த யானை வனப்பகுதியை விட்டு 31-ந்தேதி வெளியேறியது. பொள்ளாச்சி வழியாக காடு, வயல்வெளிகளை கடந்து 130 கி.மீட்டர் தூரமுள்ள உடுமலை மைவாடி கண்ணாடி புதூர் பகுதிக்கு வந்தது.

    கடந்த 13 நாட்களாக அங்குள்ள அமராவதி சர்க்கரை ஆலை பின்புறம் சுற்றி திரிகிறது. இதனை வனப் பகுதிக்குள் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் மாரியப்பன், கலீம் கொண்டு வரப்பட்டது.

    இந்த கும்கிகளுடன் சின்னதம்பி யானை நண்பர்களாக பழகியது. இதனால் சின்ன தம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் கும்கிகளை சின்னதம்பி எதிர்த்து விரட்ட தொடங்கியது. இதனை தொடர்ந்து கும்கியானை மாரியப்பனை டாப்சிலிப் முகாமிற்கு திருப்பி அனுப்பிய வனத்துறையினர் அங்கிருந்து மற்றொரு கும்கியான சுயம்புவை அழைத்து வந்தனர்.

    இந்த கும்கியுடனும் சின்னதம்பி நட்பு பாராட்ட தொடங்கியது. இதனால் சின்னதம்பி யானையை வன பகுதிக்குள் விரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    தற்போது சின்னதம்பி யானை கண்ணாடி புதூர் பகுதியிலே கற்றி திரிகிறது. அங்கு பயிரிடப்பட்ட உள்ள வாழை, கரும்பு, வெங்காய பயிர்களை தின்று நாசம் செய்து வருகிறது.

    அதனை பார்க்க ஏராளமான பொதுமக்கள் மைவாடி பகுதிக்கு குவிந்து வருகிறார்கள். ஆனால் சின்னதம்பி யானை பொதுமக்களை எந்த தொந்தரவும் செய்வதில்லை.

    அதன் நடமாட்டத்தை 80-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள். கடந்த 13 நாட்களாக ஒரே பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் நேற்று மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. அடிக்கடி கரும்பு தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது.

    இன்று அதிகாலை 3 மணியளவில் சற்று சோர்வு தெளிந்து சுமார் 1 கிலோ மீட்டர் வரை சென்றது. பின்னர் கரும்பு தோட்டத்திற்கு திரும்பி விட்டது.

    சின்னதம்பி யானை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் தீர்ப்பை பொறுத்து தான் சின்னதம்பி யானை வனப்பகுதியில் விரட்டப்படுமா? அல்லது முகாமிற்கு கொண்டு செல்லப்படுமா? என்பது தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #ChinnathambiElephant
    சின்னதம்பி யானையின் பாதுகாப்பை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ChinnathambiElephant #MadrasHC
    சென்னை:

    கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ள சின்னதம்பி யானையை முகாமில் அடைக்க வேண்டும் என்றும் வனப்பகுதிக்கு அருகே சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் முரளிதரன் என்ற வன விலங்கு ஆர்வலர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கிற்கு, பதில் மனு தாக்கல் செய்த தமிழக வனத்துறை, சின்னதம்பி யானை வனப்பகுதியையும், மக்கள் வசிக்கும் பகுதியையும் ஒன்றே என்று நினைக்கிறது. அதில் உள்ள வித்தியாசத்தை மறந்து விட்டது. மக்கள் கூச்சல் போட்டு விரட்டினால், பொதுவாக காட்டு யானைகள், காட்டுக்குள் ஓடும். ஆனால், சின்னதம்பி யானை இதை கண்டுகொள்ளாமல் உள்ளது.

    அதை விரட்டினால் காட்டுக்குள் ஓடுவதற்கு பதில் ஊருக்குள் ஓடுகிறது. எனவே இந்த யானையை பிடித்து முகாமில் அடைத்து, அங்குள்ள பிற யானைகளுக்கு அளிக்கும் பயிற்சியை போல சின்னதம்பிக்கும் பயிற்சி அளிப்பதை தவிர வேறு வழியில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.



    இந்த நிலையில், நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘சின்னதம்பி யானை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ள விலங்குகள் நல ஆர்வலர் சென்னை வந்துள்ளார். அவர் இந்த ஐகோர்ட்டில் ஆஜராகி யானை குறித்து விளக்கம் அளிப்பார். அதனால் இந்த வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    அப்போது நீதிபதிகள், ‘அந்த யானை இப்போது எங்கு உள்ளது? வனப்பகுதிக்கும், அது நிற்கும் பகுதிக்கும் எவ்வளவு தூரம் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘தற்போது திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள வனப்பகுதி கிராமங்களை சுற்றி வருகிறது. வனப்பகுதிக்கும், அது இருக்கும் பகுதிக்கும் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அந்த யானை ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று பழகிவிட்டது. அதனால், இயற்கை உணவை அது மறந்து விட்டது’ என்றார்.

    அப்போது நீதிபதிகள், அந்த இயற்கை உணவை வழங்கி, காட்டுக்குள் விரட்டினால் என்ன? என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உத்தரவிட்டனர். அதே நேரம் சின்னதம்பி யானையின் பாதுகாப்பை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
    சின்னதம்பி யானை தினசரி கதாநாயகன் ஆகி இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிக மரங்கள் வளர்ப்பது குறித்தும், மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வன விலங்குகளை காட்டுக்குள் அனுப்புவது பற்றியும் உறுப்பினர்கள் கார்த்திகேயன், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

    தற்போது சின்னதம்பி யானை தினசரி கதாநாயகன் ஆகி இருக்கிறது. தினமும் தொலைக்காட்சிகளில் அதுபற்றிய செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த யானையை என்ன செய்யப் போகிறீர்கள் என்று உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

    ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வருகிறது. கோர்ட்டு உத்தரவுப்படி சின்னதம்பி யானை காட்டுக்குள் அனுப்புவதா? அல்லது மக்களுக்கு அது தொந்தரவு செய்யாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    காட்டுப் பன்றிகள் தொந்தரவு பற்றியும் குறிப்பிட்டார்கள் அவற்றை சுட்டு பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    மனிதர்களிடம் இருந்து மிருகங்களை காப்பதும், மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பதும் அரசின் கடமை. அதை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது.

    வனப்பகுதியிலும் வாய்ப்பு உள்ள இடங்களிலும் மரங்களை வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தமிழ் நாட்டில் வனங்களின் நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ.54 கோடி செலவில் புயலால் பாதிக்காத பனை, சவுக்கு, தேக்கு போன்ற மரங்களை நட அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly
    சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChinnathambiElephant #HC
    சென்னை:

    சென்னை ஐகோர்டில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில், ‘கோவை மாவட்டத்தில் அண்மை காலமாக ஏராளமான காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளன. கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை தான் இதற்கு காரணம். தற்போது, சின்னதம்பி என்ற யானை ஊருக்குள் புகுந்து, காட்டுக்குள் செல்லாமல் ஊரை சுற்றி வருகிறது.

    எனவே இந்த செங்கல் சூளைகளை இழுத்து மூட வேண்டும். சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து விரிவான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர். #ChinnathambiElephant #HC
    சின்னதம்பி யானை மீண்டும் வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை என்று யானை நல நிபுணர் யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்த பின்னர் கூறினார். #ChinnathambiElephant
    உடுமலை:

    கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கு சில நாட்கள் சுற்றிய காட்டுயானை கடந்த 31-ந்தேதி நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை கோபால்சாமி மலையில் விரட்டி விட்டனர்.

    மறுநாள் 1-ந்தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை மைவாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதருக்குள் யானை நின்றது. 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த யானை பசி மற்றும் தூக்கத்தால் மயங்கியது.

    யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.

    இந்நிலையில் யானையை விரட்ட வந்த கும்கி கலீமும், சின்னதம்பியும் நண்பர்களாகி விட்டன. கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தன.

    கும்கிகள் கரும்புடன் காப்புக்காட்டுக்கு நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன் முதல் கட்டமாக நேற்று யானை படுத்து ஓய்வு எடுக்கும் புதர்களை வனத்துறையினர் வெட்டி அகற்றினர். புதர்களை வெட்டி அகற்றியபோதும் அங்கிருந்து யானை வேறு இடத்துக்கு செல்லாமல் முகாமிட்டுள்ளது.

    இன்று 6-வது நாளாக கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் மைவாடி ரெயில் நிலையத்துக்கும் இடையே சின்னதம்பி நிற்கிறது.

    தமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் ஸ்ரீ வத்சவா உத்தரவுபடி யானை நல நிபுணர் அஜய் ஜோசாய் யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

    சின்னதம்பிக்கு தேவையான உணவும், தண்ணீரும் இந்த பகுதியில் கிடைப்பதால் வெளியேற மறுக்கிறது. மேலும் கும்கிகளுடன் நன்றாக பழகி வருகிறது. சின்னதம்பியால் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்துலும் இல்லை. சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விட்டாலும், மீண்டும் அது சமவெளிக்கு பகுதிக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மீண்டும் சின்னதம்பி யானை வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிக்கை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கரும்பு தோட்டத்தில் 6-வது நாளாக முகாமிட்டுள்ளதால் கரும்பு தோட்டம் சேதம் அடைந்துள்ளது.

    இதுகுறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் ரமணி தேவி கூறும்போது, கடந்த 6 நாட்களாக சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வழங்க உள்ள விதை கரும்புகளை தான் யானை தின்று நாசம் செய்கிறது.

    விதை கரும்பை தவிர நிர்வாகப் பணிகளும் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து வனத்துறைக்கு நிலைமையை எடுத்து கூறியுள்ளோம் என்றார். சின்னதம்பியை பார்க்க பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி உள்ளிட்ட வன அதிகாரிகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இரவு பகலாக சின்னதம்பியை கண்காணித்து வருகிறார்கள். #ChinnathambiElephant



    ‘சின்னதம்பி’ யானையை மீண்டும் தடாகம் பகுதிக்கு கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #ChinnaThambiElephant
    உடுமலை:

    கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கு சில நாட்கள் சுற்றிய காட்டுயானை கடந்த 31-ந்தேதி நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை கோபால்சாமி மலையில் விரட்டி விட்டனர்.

    மறுநாள் 1-ந்தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை மைவாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதருக்குள் யானை நின்றது. 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த யானை பசி மற்றும் தூக்கத்தால் மயங்கியது. வனத்துறையினர் தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். அதன்பின்னர் யானைக்கு மயக்கம் தெளிந்தது.

    யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.

    இந்நிலையில் யானையை விரட்ட வந்த கும்கி கலீமும், சின்னதம்பியும் நண்பர்களாகி விட்டன. கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தன.

    யானையின் இந்த திடீர் மாற்றம் குறித்து அறிந்த கால்நடை டாக்டர் மனோகரன் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். காட்டுயானையை வேறு இடத்துக்கு மாற்றினால் ஆவேசமாக இருக்கும். சின்னதம்பி குழந்தைபோல் மாறியது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்றார்.

    மாவட்ட வன அலுவலர் தீலிப், உடுமலை ரேஞ்சர் தனபால், அமராவதி ரேஞ்சர் முருகேசன், தலைமை வன அதிகாரி கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மீண்டும் சின்னதம்பிக்கு பிடித்த இடமான தடாகம் பகுதியிலேயே விட ஆலோசனை நடத்தினர்.

    கும்கிகள் கரும்புடன் நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறுகிறார்கள். இன்று 5-வது நாளாக கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் மைவாடி ரெயில் நிலையத்துக்கும் இடையே சின்னதம்பி நிற்கிறது. அதன் போக்கிலேயே விட்டுபிடிக்க வனத்துறையினர் காத்திருக்கிறார்கள்.

    பொதுமக்கள் வாழைப்பழம், மக்காச்சோள கதிர்களை கொண்டு வந்து பார்த்து வருகிறார்கள். கொண்டு வந்த தின்பண்டங்களை வன ஊழியர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் சின்னதம்பிக்கு கொடுக்கிறார்கள். சின்னதம்பி ஆசை ஆசையாக வாங்கி உண்கிறது.

    சின்னதம்பியை இன்னும் ஒருவாரம் இதே பகுதியில் வைத்து அதன் உடல் நலம் மற்றும் மன நிலை நல்ல நிலைக்கு திரும்பிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் என்று வனத்துறை அதிகாரி கூறினர்.

    சர்க்கரை ஆலையின் பின்புறம் சின்னதம்பி முகாமிட்டுள்ளதால் அதன் பாதுகாப்பு கருதி அது நடமாடும் பகுதியில் தேங்கிய கழிவு நீரை நிர்வாகம் மோட்டார் மூலம் வெளியேற்றியது. #ChinnaThambiElephant


    சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #ChinnathambiElephant
    சென்னை:

    கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் கொண்டு சென்று விட்டாலும் அது அங்கு இருக்காமல் ஊருக்குள் வருவது தொடர்கதையாகி உள்ளது.

    இதையடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து “சின்னதம்பி பாதுகாப்பு குழு” என்ற பெயரில் தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 31-ந்தேதி காட்டுப்பகுதியில் இருந்து மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானை ஒவ்வொரு பகுதியாக சுற்றி வருகிறது. தற்போது உடுமலை அருகே மயில்வாடி என்ற இடத்தில் சின்னதம்பி யானை தஞ்சம் புகுந்துள்ளது. ஊரை எட்டியுள்ள பகுதிகளில் நடமாடினாலும் யானை இதுவரையில் யாரையும் தாக்கவில்லை.

    தனது ஆக்ரோ‌ஷத்தையும் காட்டவில்லை. இதனால் அதன் போக்கிலேயே யானையை விட்டு 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். யானை நடமாட்டத்தை அறிய அதன் முதுகில் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் விலங்குகள் நல ஆர்வலரான அருண் பிரசன்னா என்பவர் சின்னதம்பி யானைக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

    ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு ஆஜரான அவர், கும்கி யானையாக சின்னதம்பி யானையை மாற்றினால் அது சித்ரவதை செய்யப்படும். இதனால் யானை பலியாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுபற்றி முறைப்படி மனு அளியுங்கள். இன்று பிற்பகலிலேயே விசாரணை நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

    அதன்படி பிற்பகல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    2 கும்கி யானைகள் மூலம்  சின்னதம்பி யானையை காட்டுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.  #ChinnathambiElephant
    மயக்க ஊசி செலுத்தி டாப்சிலிப்பில் விடப்பட்ட ‘சின்னதம்பி’ யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்தது. யானையை பார்த்து அதிர்ச்சியடைந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். #ChinnathambiElephant
    பொள்ளாச்சி:

    கோவை சின்னத்தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், சோமையனூர், தாளியூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக சின்னத்தம்பி மற்றும் விநாயகன் ஆகிய 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள், ரேசன் கடை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

    விவசாயிகளின் புகாரையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 கும்கிகள் உதவியுடன் விநாயகன் என்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சின்னத்தம்பி யானை தப்பியது.

    மயக்க ஊசியில் இருந்து தப்பிய ‘சின்னத்தம்பி’ யானை பன்னிமடை, சி.ஆர்.பி.எப் கேம், கதிர்நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் ஆக்ரோஷமாக சுற்றி பயிர்களை சேதப்படுத்தி வந்தது.



    சின்னத்தம்பி யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து சலிம், தெப்பக்காடு முதுமலை முகாமில் இருந்து முதுமலை என்ற கும்கிகளும் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே அங்கு நிறுத்தப்பட்டிருந்த விஜய், சேரன் ஆகிய கும்கிகள் உதவியுடன் கோவை ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், விரைவு காப்பாட்டு குழுவினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 50 பேர் விடிய, விடிய போராடி துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி கடந்த 25-ந்தேதி சின்னதம்பி யானையை பிடித்தனர்.

    3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் சின்னத்தம்பி யானையை கும்கிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றினர். லாரியில் யானையை ஏற்றும்போது அதன் தந்தங்கள் முறிந்தன. கும்கிகள் குத்தியதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. லாரியில் கொண்டு செல்லப்பட்ட சின்னதம்பி யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை டாப்சிலிப் பகுதிக்கு அன்று இரவே கொண்டு செல்லப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னர் டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் யானை விடப்பட்டது.

    ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டம், உடல் நலம் போன்றவை கண்காணிக்கப்பட்டது. 26-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்பட்டதில் விடப்பட்ட வரகளியாறு பகுதியிலேயே தண்ணீர், உணவு அருந்தி அந்த பகுதிலேயே தூங்கியது தெரியவந்தது. நேற்று முதல் சின்னத்தம்பி யானை மெதுவாக நடந்து ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊரை நோக்கி வந்தது. இந்த ஊர் ஆழியாறில் இருந்து 9 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.

    சின்னதம்பி யானை இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இன்று காலை 6 மணியளவில் ரோட்டில் நடந்து வந்தது. யானை புகுந்த தகவல் தெரியாத சிலர் வழக்கம்போல் வெளியில் நடமாடினார்கள். யானையை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர். கம்பீரமாக அதே சமயம் தந்தங்கள் முறிந்த நிலையில் சுற்றிய யானை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து டாப்சிலிப்பில் விடப்பட்ட சின்னத்தம்பி என்ற யானை என்பதை அறிந்தனர்.

    சம்பவ இடத்துக்கு பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது அது சின்னதம்பி யானைதான் என்பதை உறுதிப்படுத்தினர். காட்டுயானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இதேபோன்று ஊருக்குள் நுழைந்துகொண்டே இருந்தால் அதனை வளர்ப்பு யானையாக முகாமில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். #ChinnathambiElephant
    ×